நெல்லை: செல்வாக்கு இருந்தும் நயினார் `சரிந்த' சம்பவம்; கூட்டணி பலத்தால் கரை சேர்ந்த காங்கிரஸ்!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என நம்பப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக நெல்லை தொகுதி பார்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், நயினார் நாகேந்திரன் போட்டியிட்டதுதான். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் என்பது போன்ற தனிப்பட்ட குணங்களால் அவர் வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் சந்திப்பு

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க களமிறக்கியது. காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியை சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் களமிறக்கப்பட்டதற்கு உகட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. அ.த.மு.க சார்பாக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டு, பின்னர் அவசரமாக மாற்றிவிட்டு திசையன்விளையை சேர்ந்த ஜான்சிராணியை களமிறக்கினார்கள்.

நெல்லை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின் பிரசாரம், பிற கட்சி வேட்பாளர்களை விடவும் தீவிரமாக இருந்தது. ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லாத நிலையில், தன்னால் முடிந்தவரை செலவு செய்தார். கடைசி நேரத்தில் அவரால் செலவு செய்ய முடியாமல் போனது, அவரது வாக்கு சதவிகிதத்தை குறைத்துள்ளது. கட்சிக்குள் நிலவிய எதிர்ப்பை சரிசெய்து விட்டு பிரசாரத்தை மேற்கொண்ட ராபர்ட் புரூஸூக்கு கூட்டணி பலம் பெரும் வரமாக அமைந்தது.

வாக்கு எண்ணிக்கை மையம்

தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ராபர்ட் புரூஸ் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள். அத்துடன், சமூக பலம் மற்றும் தொகுதியில் கணிசமாக வசிக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஆகியவை தன்னை கரை சேர்க்கும் என்கிற நம்பிக்கையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சி.எஸ்.ஐ கிறிஸ்துவரான அவர் பிஷப் கூட்டமைப்பின் வழக்கறிஞராகவும் செயல்பட்டுள்ளார். அதனால் தான் சார்ந்த சமூகம் மற்றும் சிறுபான்மையினர் கை கொடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தார். அது தற்போது உண்மை என நிரூபணமாகியுள்ளது.

பாரதிய ஜனதா வேட்பாளரான நயினார் நாகேந்திரன், ஏற்கெனவே நெல்லை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். தனது தனிப்பட்ட செல்வாக்கால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுபோலவே இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியும் என முழுமையாக நம்பினார். ’நான் சார்ந்த கட்சியைப் பார்க்காதீர்கள். என்னைப் பார்த்து வாக்களியுங்கள்’ என சிறுபான்மை மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். அதற்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்த போதிலும், அவரால் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ்

நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்புக்காகத் தனது கட்சியினர் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. கட்சியினரை நம்புவதை விடவும் தனக்கு வேண்டப்பட்டவர்களின் ஆலோசனைப்படியே செயல்படுவதாக் கட்சியினர் பலரும் குறைப்பட்ட சம்பவங்களும் நடந்தன. அவருக்கு வாக்கு கேட்டு பிரதமர் மோடியே அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு வெற்றி எளிமையாக இருக்கும் என கட்சியினரும் நம்பினார்கள். ஆனாலும் அவரால் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

நீண்டகாலமாக அ.தி.மு.க-வில் இருந்ததால் அக்கட்சியினர் பலரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு கொடுக்குமாறு நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளின்படி சில அ.தி.மு.க நிர்வாகிகள் தங்கள் வேட்பாளருக்கான பிரசாரத்தில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்ட சம்பவமும் நடந்தது. சிலரை கட்சித் தலைமை அழைத்து காட்டமாக பேசிய பிறகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்ததாக கட்சியினரே பேசிக் கொண்டார்கள்.

பாதியில் வெளியேறிய நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலாகவே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலையில் இருந்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் வித்தியாசம் அதிகரித்தபடியே இருந்ததால் நயினார் நாகேந்திரன் 5-வது சுற்றின் முடிவிலேயே (சுமார் 12 மணிக்கு) வாக்கு எண்ணிக்கை நடந்த நெல்லை பொறியியல் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “மக்களின் தீர்ப்பை நான் ஏற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இறுதிச் சுற்றின் முடிவில், 1,65,670 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்…

ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) – 5,02,296

நயினார் நாகேந்திரன் (பாஜக) – 3,36,676

ஜான்சிராணி (அதிமுக) – 89,601

சத்யா (நாதக) – 87,686

ராபர்ட் புரூஸ் வெற்றியை தி.மு.க-வினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். நெல்லையப்பர் கோயில் ரத வீதிகளில் தி.மு.க-வினர் கட்சிக்கொடியை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றார்கள். பட்டாசுகளை வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *