பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள குற்றவாளிக்கு ஜாமீன் – கோர்ட் உத்தரவு | Karnataka High Court grants man accused of rape 15-day bail to marry survivor who turned 18

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 வயதான பாலியல் குற்றவாளிக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை (18.06.2024) 15 நாள்கள் ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைசூரைச் சேர்ந்த நபர்மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடந்த 2023-ம் ஆண்டு 16, பிப்ரவரி மாதம் அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு 16 வயது, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், தனது மகளை அந்நபர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். இச்சூழலில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது IPC பிரிவு 376 (2) (n) மற்றும் 5 (L), 5 (j) (ii) மற்றும் POCSO சட்டம், 2012 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்நபர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி  கர்ப்பமாகியுள்ளார். 

பாலியல் வன்கொடுமைபாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

மேலும் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரியல் தந்தை யார் என்பதை கண்டறிய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், சிறையிலுள்ள அந்நபர் தான் தந்தை என மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின. அதன் பிறகு பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து, அக்குழந்தைக்கு தற்போது 1 வயதாவது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாகிவிட்டதாகவும், ஆகையால் இவர்களின் திருமணத்தை நடத்த விரும்புவதால், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் இருவீட்டார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் பிறகு அம்மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், நீதிபதி எம்.நாக பிரசன்னா கூறியதாவது, “CRPC-ன் பிரிவு 482-ன் கீழ் அதிகார வரம்பிற்கு உட்பட்டு மனுதாரருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்குகிறது. மனுதாரர் வெளியே வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தாய் அக்குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதால், வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் தனித்தன்மைகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இத்தீர்ப்பின் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தை எதிர்காலத்தில் எந்த விதத்திலும்  அவமானத்தையும் சந்திக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *