`பிரிவினை ஏற்படுத்தும் பேச்சு; முந்தைய பிரதமர்கள் யாரும் இதுபோல்…' – மோடியைச் சாடும் மன்மோகன் சிங்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம், ராஜஸ்தானில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை எனது தாய் மற்றும் சகோதரிகளின் மாங்கள்யத்தைக்கூட விட்டுவைக்காது.” எனப் பேசினார்.

பிரதமர் மோடி

இதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது பாஜக. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, மன்மோகன் சிங் பேசிய முழுமையான வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “தேர்தல் பிரசாரத்தின் அரசியல் விவாதத்தை நான் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மோடி முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும் இழிவான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அதன் மூலம், பதவியின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் தீவிரத்தையும் குறைத்த முதல் பிரதமர் என்ற பெருமை மோடியையே சேரும். ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறித்து பேச முந்தைய பிரதமர்கள் இது போன்ற கீழ்த்தரமான மொழியைப் பயன்படுத்தவில்லை. மேலும், என்னைப் பற்றி சில தவறான அறிக்கைகளையும் கொடுத்துள்ளனர். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்தையும் இன்னொரு சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை.

மன்மோகன் சிங்

ஆனால் அப்படி பார்ப்பதுதான் பா.ஜ.க-வின் பழக்கம். பஞ்சாப்பின் ஒவ்வொரு வாக்காளரும் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து இளைஞர்களும் கவனமாக எதிர்காலத்திற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, வளர்ச்சியை வழிநடத்தும் முற்போக்கான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும். கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் பேரவலத்தை கண்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம், தவறாக நிர்வகிக்கப்பட்ட ஜி.எஸ்.டி, கொரோனா தொற்றுநோயின்போது மோசமான நிர்வாகம் ஆகியவை மோசமான பொருளாதார நிலைமைகளை உருவாக்கியுள்ளன. சராசரிக்கும் கீழே ஜி.டி.பி செல்வது இந்த ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது. பா.ஜ.க ஆட்சியில் ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், காங்கிரஸ்-யு.பி.ஏ ஆட்சியினபோது 8 சதவிகிதமாக இருந்ததையும் நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ்-யு.பி.ஏ ஆட்சியில் பெரும் சவால்கள் இருந்தபோதிலும், நமது மக்களின் வாங்கும் சக்தியை தொடர்ந்து அதிகரித்தது. பா.ஜ.க அரசின் தவறான நிர்வாகம் குடும்ப சேமிப்புகளை 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *