Modi: `தெய்வீக, அசாதாரண ஆற்றலை உணர்கிறேன்…' – குமரி தியானம் குறித்து பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள்களாக (45 மணி நேரம்) தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்படும்போது பார்வையாளர்கள் புத்தகத்தில் `எனது ஒவ்வொரு நிமிடமும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்’ என்று எழுதினார். அதைத் தொடர்ந்து, அவர் கன்னியாகுமரி தியானம் குறித்து ஒரு கட்டுரை எழுதியதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

கன்னியாகுமரியில் மோடி

அந்தக் கட்டுரையில், “இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் பார்வதி தேவியும், சுவாமி விவேகானந்தரும் தவம் செய்த, விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றதன் மூலம், நான் ஒரு தெய்வீக மற்றும் அசாதாரண ஆற்றலை உணர்கிறேன். தேர்தல் வெறி என் மனதில் எதிரொலிப்பது இயல்பு. பேரணிகளிலும், ரோட் ஷோக்களிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்து சென்றன. எங்கள் நாரி சக்தி(பெண்கள்)யின் ஆசிகள்… நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் எனக்கு கிடைத்த அனுபவம்.

அதை நினைத்து என் கண்கள் ஈரமாகிக்கொண்டிருந்தன… அப்படியே நான் ஒரு ‘சாதன’ (தியான) நிலைக்குள் நுழைந்தேன். என்னுள் ஒரு பற்றின்மை உணர்வு வளர… என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. இவ்வளவு பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் செய்வது சவாலானது. ஆனால் கன்னியாகுமரி நிலமும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதை சிரமமின்றி செய்ய வைத்தது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் தியானத்தில் இருந்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களுக்குப் புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் விசாலம் என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை, ஒருமையைத் தொடர்ந்து எனக்கு உணர்த்தியது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலையில் மேற்கொள்ளப்பட்ட அனுபவங்களும் புத்துயிர் பெறுவதுபோல் உணர்ந்தேன்.

கன்னியாகுமரி எப்போதும் என் மனதிற்கு நெருக்கமானது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவகம், ஏக்நாத் ரானடே ஜி தலைமையில் கட்டப்பட்டது. ஏக்நாத் ஜியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நினைவிடம் கட்டும்போது கன்னியாகுமரியிலும் சிறிது நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைத்தது. ஆன்மிக மறுமலர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர், எனது உத்வேகமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது பயிற்சியின் அடித்தளமாகவும், ஆன்மிக குருவாகவும் இருக்கிறார்.

மோடி

நாடு முழுவதும் பயணம் செய்த சுவாமி விவேகானந்தர், கன்னியாகுமரியில் தியானம் செய்தார். அதன் பிறகே அவர் ஒரு புதிய திசையைப் பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரின் லட்சிய கனவுகளின்படி இந்தியாவை வடிவமைத்து வரும் இந்த நேரத்தில், இந்தப் புனிதமான இடத்தில் தியானம் செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்.

இது எனது வாழ்க்கையின் நம்பமுடியாத தருணங்களில் ஒன்றாகும். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், என் உடலின் ஒவ்வொரு துகளும் எப்போதும் தேசத்தின் முன்னேற்றம், மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரதியின் தாய் காலடியில் அமர்ந்து, மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *