மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு இரண்டு முறை பா.ஜ.க ஆட்சியமைத்தபோது தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடிந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் விவகாரத்திலும் பா.ஜ.க எடுக்கும் முடிவுதான் இறுதியானதாக இருந்தது. ஆனால் இப்போது தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதாரவு நிழலில் ஆட்சியமைக்க வேண்டிய நிலை பா.ஜ.க-விற்கு ஏற்பட்டு இருக்கிறது.
NDA: 4 எம்.பி-க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என கணக்கு போடுகிறதா பாஜக?
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு கூட்டணிக் கட்சிகளும், அமைச்சரவையில் தங்களுக்கு அதிகப்படியான அமைச்சர் பதவிகள் கொடுக்கும்படி கேட்டு பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் பா.ஜ.க விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பா.ஜ.க, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதில் 4 எம்.பி-க்களுக்கு ஓர் அமைச்சர் பதவி வீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 16 எம்.பி-க்கள் வைத்திருக்கும் தெலுங்கு தேசத்திற்கு 4 அமைச்சர் பதவியும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 அமைச்சர் பதவியும், சிவசேனாவிற்கு 2 அமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கட்சிக்கு 5 எம்.பி-க்கள் இருப்பதால், அக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
NDA: முக்கிய துறைகளுக்கு `நோ’ சொன்ன பாஜக?
அதேசமயம் உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை, வெளியுறவுத்துறைகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்க முடியாது என்று கூட்டணிக் கட்சிகளிடம் பா.ஜ.க திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். தெலுங்கு தேசம் தங்களுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதனை கொடுக்க பா.ஜ.க தயாராக இல்லை. அதோடு தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று தெலுங்கு தேசம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தங்களுக்கு ரயில்வே துறையை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்கும் துறை, இளைஞர் நலம், வேளாண் துறைகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ளவும் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை நேரடியாக இத்துறைகள் அணுகக்கூடியவை என்பதால், அவற்றை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளை ஐக்கிய ஜனதா தளத்திற்கு கொடுக்கவும், விமான போக்குவரத்து, இரும்புத்துறையை தெலுங்கு தேசத்திற்கு கொடுக்கவும், கனரக தொழில்துறையை சிவசேனாவுக்கு கொடுக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை இணையமைச்சர்களாக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, சிறு மற்றும் குறு தொழில்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சமூக நீதி போன்ற துறைகளையும் கூட்டணிக் கட்சிகளிடம் விட்டுவிட பா.ஜ.க முடிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடு தொடர்ந்து சபாநாயகர் பதவி கேட்டு முரண்டு பிடித்தால் அவரது கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பது குறித்தும் பா.ஜ.க ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
அமைச்சரவை பதவியேற்பின்போது முழுமையான அமைச்சரவை பதவியேற்க திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவுத்துறைகளை வழங்கவும் பா.ஜ.க ஆலோசித்து வருகிறதாம். ஐக்கிய ஜனதா தளத்திற்கு ரயில்வே துறையை வழங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb