இந்த நிலையில், நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளைப் பொய்களைப் பரப்புவதாகவும், நாட்டின் எதிர்காலத்தோடு காங்கிரஸ் விளையாடுவதாகவும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நீட் தேர்வில் முடிவுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மட்டும் பிரச்னை இல்லை. வினாத்தாள் கசிவு போன்ற மோசடி நடந்திருக்கிறது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் பங்கேற்கும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையம் என்ற இணைப்பை உருவாகி, “பணம் செலுத்துங்கள், வினாத்தாள் பெறுங்கள்’ என்ற விளையாட்டு விளையாடப்படுகிறது. மோடி அரசு தனது பொறுப்பை NTA மீது இறக்கிவைத்துவிட்டு தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. இதில், உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் ஆண்டு வீணாகாமல் இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு, மோசடி மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என்று இன்று மாலை ட்வீட் செய்திருந்தார்.