Vikatan Plus – 09 June 2024 – ‘குடவோலை முறை’… உண்மையான ஜனநாயகத் தேர்தல் முறையா?- உத்திரமேரூர் கல்வெட்டும், உலக மகா உருட்டுகளும்! | Uthiramerur Inscription and kudavolai system

‘உலகத்துக்கே தேர்தல் நடைமுறையைச் சொல்லித் தந்தவன் தமிழேண்டா..”

– இந்தியாவில்/தமிழகத்தில்… ஏன், அமெரிக்காவில் தேர்தல் வந்தாலும்கூட, உத்திரமேரூரில் இருக்கும் சோழர்கள்கால கல்வெட்டைப் பகிர்ந்து… `வாழ்க ஜனநாயகம்’ என்று பலரும் பரவசப்படுவதுண்டு.

`தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தை உலகத்துக்குப் பறைசாற்றினார்கள்’, ‘அன்றைய குடவோலை முறை… இன்றைய தேர்தல் முறையின் முன்னோடி’ என ஆளுக்கொரு கருத்தைச் சொல்வதால், ‘குடவோலை’ முறையை நம் அடையாளமாகப் பார்த்துப் பலரும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், “அந்தக் குடவோலை முறை என்பது இன்றைய தேர்தலுக்குத் துளிக்கூடச் சம்பந்தமில்லாத ஒன்று. ஆனால், மக்களில் பலரும்… ஏன் அரசாங்கமும் அதை நம்பி, திரும்பிய பக்கமெல்லாம் உத்திரமேரூர் கல்வெட்டுப் புகழ் பாடிக்கொண்டிருப்பதுதான் அதிர்ச்சி’’ என்று நம்மை எழுந்து உட்காரவைக்கிறார் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான விக்னேஷ் சீனிவாசன்.

குடவோலை முறை பற்றிப் பேசும் உத்திரமேரூர் கல்வெட்டு தொடர்பான செய்தி, குழந்தைகளுக்கான சமச்சீர் கல்விப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருக்கிறது, தமிழக தேர்தல் ஆணையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் அதை உணர்த்துகின்றன. தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலில் இந்தக் கல்வெட்டின் மாதிரி ஒன்று பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பாடமாகப் படிக்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில்கூட உத்திரமேரூர் கல்வெட்டின் மாதிரி இடம்பெற்று, ஒன்றிய அளவில் மூன்றாம் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

`சரி, உண்மையிலேயே குடவோலை முறை என்பது என்ன… அதில், இன்றைய தேர்தல் முறைக்கு முன்னோடியாக என்னவெல்லாம் இருக்கின்றன?’ என்ற கேள்விகளுடன்தான் விக்னேஷ் சீனிவாசனைச் சந்தித்தோம். ஆனால் அவரோ, மொத்தத்தையும் உடைத்துப்போட்டார்.

Iவிக்னேஷ் சீனிவாசன்Iவிக்னேஷ் சீனிவாசன்

Iவிக்னேஷ் சீனிவாசன்

குடவோலையும், வரலாற்றுப் பின்னணியும்!

“குடவோலை முறை என்பது சங்ககாலம் தொட்டே தமிழர்களின் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அகநானூற்றின் 77-ம் பாடலில் ‘குழிசியோலை முறை’ என்ற முறையில் ஊர்த் தலைவர் தேர்வு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதற்கான விதிமுறைகளோ, யார் போட்டியிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோ, தகுதிகளோ எதுவும் அந்தப் பாடலில் குறிப்பிடப்படவில்லை. குடவோலை முறை குறித்த செய்தியை மட்டுமே அறிந்துகொள்ள முடிகிறது.

இடைக்காலத்தில், தென்பாண்டி நாட்டில் மானூர் எனும் ஊரில் அம்பலவாணசுவாமி கோயில் மண்டபத் தூணில் கிடைக்கப்பெற்ற கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் மாறன் சடையனால் வழங்கப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டில், மானநிலை நல்லூர் மகாசபையில் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளாக, `வேதம் கற்றவர், ஊரில் நிலம் உடையவர், நன்னடத்தைகொண்டவர் பங்கு பெறலாம்’ எனத் தகுதிகளை வரையறுக்கிறது.

கி.பி 10-ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு, உத்திரமேரூரில் அமைந்திருக்கும் வாரியங்களுக்கான தேர்வு மற்றும் தகுதிகள் குறித்து மிக விரிவாகக் குறிப்பிடுகிறது. இதையே `குடவோலை முறையின் முன்னோடி’ என்று நாம் பாடப்புத்தகங்களில் படித்துவருகிறோம்.

குடவோலை முறைகுடவோலை முறை

குடவோலை முறை

இரண்டிலுமே ஜனநாயகம் இல்லை!

‘மானூர் கல்வெட்டுதானே’ காலத்தால் முந்தையது என்று இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாவருக்கும் ஐயம் வரலாம். ஆங்கிலேயர் காலத்தில் கல்வெட்டுகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டபோது, முதலில் (1890-களில்) உத்திரமேரூர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மானூர் கல்வெட்டு 1906-ல்தான் கண்டெடுக்கப்பட்டது. இடைப்பட்ட 10 ஆண்டுக்காலத்துக்குள் உத்திரமேரூர் கல்வெட்டு அன்றைய முக்கிய வரலாற்றாளர்கள் அனைவராலும் பேசுபொருளாக இருந்தது. தவிர, மானூர் கல்வெட்டைக் காட்டிலும் மிக விரிவாக உத்திரமேரூர் கல்வெட்டு குடவோலை முறையைப் பேசியதாலும், உத்திரமேரூர் கல்வெட்டு சிறப்பாகப் பேசப்படுகிறது எனலாம்.

உண்மையிலேயே மானூர், உத்திரமேரூர் இந்த இரு கல்வெட்டுகளிலும் ஜனநாயக முறை இருந்ததா என்று ஆராய்ந்தால் ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கிறது. ஏனெனில், இன்றைய தேர்தல் முறையில் ஆண், பெண், ஏழை, பணக்காரன், சாதி-வர்ணப் பாகுபாடுகள் இல்லாமல் அனைவராலும் தேர்தலில் போட்டியிட முடிகிறது. அது மட்டு மல்லாமல், அனைவருக்கும் வாக்கு செலுத்தும் உரிமையும் இருப்பதால், வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது எனலாம். ஆனால், மானூர் மற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டால் பிராமணர்களுக்கு மட்டுமே போட்டியிடவும், போட்டி யிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் அதிகாரம் வழங்குகிறது.

உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் 
மாதிரி கல்வெட்டு உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் 
மாதிரி கல்வெட்டு

உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தில் இருக்கும்
மாதிரி கல்வெட்டு

கல்வெட்டுப் பதிவு!

ஆராய்ச்சிகளின்போது உத்திரமேரூரில் பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்தாலும் குடவோலை குறித்துப் பேசும் கல்வெட்டு, முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் குடவோலை பற்றிப் பேசியிருக்கும் ஒரு பகுதியில்,‘ஸ்வஸ்தி மதிரை கொணட் கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபயோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் முகப்படி ஆஞைனால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த பரிசாவது குடும்ப மும்மதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டோர் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டிருப்பாரை அந்த்தசௌசமும் ஆத்ம் சௌசமும் உடையராட் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு’எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வரி செலுத்தும் இடமாக உத்திரமேரூர் கொடுக்கப்படுகிறது. இதே ஊரின் ஒரு பகுதியில், போரில் உயிரிழந்தவர்களுக்கும், நாட்டுக்காகப் போருக்கு முன் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் ‘ரத்தக் கொடை’ என்ற பெயரில் நிலங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்தப் பகுதியைப் பராமரிக்க தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்ச வாரியம் போன்றவற்றை அமைக்கிறார்கள். உத்திரமேரூரில் வசித்தவர்கள் 30 குடும்பங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள். இங்கு தோட்டம் பராமரிப்பு தொடங்கி, ஏரி பராமரிப்பு வரை பராமரிப்பு பணிகளைச் செய்ய பணியாளர்கள் தேவைப்படுவதால், அனைத்துச் சாதியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பணியாளர்களாக பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். பணியாளர்களை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்புக்கு பிராமணர்களை நிர்ணயம் செய்கிறார்கள். இவ்வாறு நிர்ணயம் செய்யவே குடவோலை முறையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

குடவோலை முறையில் போட்டியிடுபவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும், எப்படித் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *